Sunday, April 12, 2015

ஊடகம் - ஊடான்

ஊடகம் மீன், சிறிய வகை மீன் இனத்தில் ஒன்று. இதன் பெரிய அளவு என்பது அரை கிலோ அளவிற்கு எடை கொண்டதாக இருக்கும். குழம்பு, வறுவல் என இரண்டிற்கும் ஏற்ற வகை மீன்களில் ஊடகம் குறிப்பிடப்பட வேண்டிய மீன். பொதுவாக குழம்பு,வறுவல் என இரண்டிற்கும் ஏதுவான மீன்களில் வறுத்த மீன்களைவிட குழம்பு மீன் சற்று மட்டுப்பட்ட சுவையிலேயே இருக்கும். ஆனால் ஊடகத்தில் பட்டி மன்றமே வைக்கலாம் அந்த அளவிற்கு குழம்பு,வறுவல் என இரண்டிலுமே வேறு வேறு விதமான சுவைகளில் ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை என்பது போல பிரமாதமாய் இருக்கும்.


 பெரிய மார்க்கெட்டுகளில் கிலோ 150லிருந்து 200 வரை விற்பனையாகும் இம்மீன்களை மற்ற இடங்களில் கிலோ 300 வரை விற்கிறார்கள். ஊடகம் ரெகுலராக மார்க்கெட்டுகளில் கிடைப்பதில்லை. கிடைக்கும்போது விலையைக் குறித்து யோசிக்காமல் வாங்கிவிடுவீர்கள் ஒரு முறை இதன் சுவையை அறிந்துகொண்டீர்களேயானால்.

ஊடகம் மீனை வாங்கும் போது கவனிக்க வேண்டியவை, சதைப்பகுதி மிகுந்த மென்மையாக இருக்கும் இம்மீன்களை ஃப்ரெஷ்ஷாக பார்த்து வாங்க வேண்டும். ஃப்ரெஷ்ஷாக இருக்கும் மீன்களை வெட்டும்போதே சதைத் துணுக்கு பிய்த்துக்கொண்டு வருவது போல இருக்கும். கவனமாக வெட்ட வேண்டியிருக்கும். இதுவே சற்றே பழைய மீனாய் இருந்தாலும் வெட்டும்போது வீணாய் போய்விடும்.

ஃப்ரெஷ் மீனாய் பார்த்து வாங்க செவுள் இரத்தச் சிவப்பில் இருப்பதையும், கண்கள் கறுப்பு நிறத்தில் இருக்க வேண்டும் என்பதனையும் பரிசோதித்து வாங்க வேண்டும் என்பதை ஏற்கனவே இன்னொரு பதிவில் பார்த்திருக்கிறோம். ஊடகத்தில் ஃப்ரெஷ் மீனைக் கண்டுகொள்வது மிகச் சுலபம். ஃப்ரெஷ் ஊடகம் கண்ணைப் பறிக்கும் பளபளப்போடு வெள்ளியைப் போல  மின்னும்.(பார்க்க முதல் படம்)

ஊடகம் மீனை அடையாளம் காணுவது குறித்துப் பார்ப்போம். ஊடகம் மீன் உடம்பு முழுவதும் அடர்ந்த செதில்களைக் கொண்டிருக்கும். உடலில் மேற்பகுதியில் கிழே இருக்கும் படத்தில் இருப்பது போல துடுப்பின் அமைப்பில் ஒன்று நீளமாக தனித்துத் தெரியும். சில நேரம் அவை உடைந்து போயும் இருக்கும், அதனால் குழப்பம் வரலாம்.


இதனால் இன்னொன்றையும் சரிபார்த்துக் கொள்ளலாம் மீனின் வயிற்றுப் பகுதி முடிந்து வால் ஆரம்பிக்கும் இடத்திற்கு முன்பாக சிறிய அளவில் துடுப்பு அமைப்பு இருக்கும். உடலின் மேற்பகுதி துடுப்பு அமைப்பின் மினியேச்சர் போல இது இருக்கும். ஆனால் இதில் இருக்கும் நீளமான அமைப்பு கடினமான முள்ளாக மிக அழுத்தமாக இருக்கும். 

 ஊடகம் மீன் குழம்பு வைக்கும் போது தேங்காய் சேர்த்தும் , தேங்காய் சேர்க்காமலும் என எப்படி வைத்தாலும் நல்ல சுவையுடன் இருக்கும். குறிப்பாக மிளகு,சீரகம் சேர்த்து வைக்கும் ஊடகம் மீன் குழம்பு வித்தியாசமான சுவையில் மீண்டும் மீண்டும் ஊடகத்தை வாங்கத் தூண்டும் வகையில் இருக்கும். 

7 comments:

  1. இதை இலங்கையில் திரளி என்போம். சுவை மிக்கது. முதற்படத்திலிட்டது கடலிலும், இரண்டாவது படத்தில் முதுகு முள் நீளமாகவுள்ளது வாவிகளிலும் கிடைப்பது. இரண்டாவது ரகம் இலங்கையில் விரும்பப்படுவதில்லை.

    ReplyDelete
  2. வணக்கம். மீன் பற்றிய தங்களின் பதிவு அபாரமாக இருக்கிறது. வாசிக்கும் போதே மீன் வாசனை வருகிறது... பழ.அசோக்குமார், புதுக்கோட்டை: செல்7598202902

    ReplyDelete
  3. வணக்கம். மீன் பற்றிய தங்களின் பதிவு அபாரமாக இருக்கிறது. வாசிக்கும் போதே மீன் வாசனை வருகிறது... பழ.அசோக்குமார், புதுக்கோட்டை: செல்7598202902

    ReplyDelete
  4. ஊடகம் மீன் பற்றி தெரிந்து கொண்டேன் நன்றி ‌‌‌,

    ReplyDelete
  5. அருமையான தெளிவான பதிவு

    ReplyDelete
  6. ஊடகம் மீனின் முட்டைகள் எப்படி இருக்கும்

    ReplyDelete
  7. ஊடகம் மீன் பற்றிய விபரங்கள் சிறப்பு. இதுபோன்ற ருசியான மீன்கள் பற்றிய விபரங்கள் எல்லாம் தெரிவியுங்கள். நாங்கள் நாட்டின் உள் பகுதியில் இருப்பதால் கடற்கரையில் இருப்பவர்கள் போல மீன்கள் பற்றிய விபரங்கள் அதிகம் தெரிவதில்லை
    .CSP
    07-7-2024 திண்டுக்கல்

    ReplyDelete