Sunday, April 12, 2015

ஊடகம் - ஊடான்

ஊடகம் மீன், சிறிய வகை மீன் இனத்தில் ஒன்று. இதன் பெரிய அளவு என்பது அரை கிலோ அளவிற்கு எடை கொண்டதாக இருக்கும். குழம்பு, வறுவல் என இரண்டிற்கும் ஏற்ற வகை மீன்களில் ஊடகம் குறிப்பிடப்பட வேண்டிய மீன். பொதுவாக குழம்பு,வறுவல் என இரண்டிற்கும் ஏதுவான மீன்களில் வறுத்த மீன்களைவிட குழம்பு மீன் சற்று மட்டுப்பட்ட சுவையிலேயே இருக்கும். ஆனால் ஊடகத்தில் பட்டி மன்றமே வைக்கலாம் அந்த அளவிற்கு குழம்பு,வறுவல் என இரண்டிலுமே வேறு வேறு விதமான சுவைகளில் ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை என்பது போல பிரமாதமாய் இருக்கும்.


 பெரிய மார்க்கெட்டுகளில் கிலோ 150லிருந்து 200 வரை விற்பனையாகும் இம்மீன்களை மற்ற இடங்களில் கிலோ 300 வரை விற்கிறார்கள். ஊடகம் ரெகுலராக மார்க்கெட்டுகளில் கிடைப்பதில்லை. கிடைக்கும்போது விலையைக் குறித்து யோசிக்காமல் வாங்கிவிடுவீர்கள் ஒரு முறை இதன் சுவையை அறிந்துகொண்டீர்களேயானால்.

ஊடகம் மீனை வாங்கும் போது கவனிக்க வேண்டியவை, சதைப்பகுதி மிகுந்த மென்மையாக இருக்கும் இம்மீன்களை ஃப்ரெஷ்ஷாக பார்த்து வாங்க வேண்டும். ஃப்ரெஷ்ஷாக இருக்கும் மீன்களை வெட்டும்போதே சதைத் துணுக்கு பிய்த்துக்கொண்டு வருவது போல இருக்கும். கவனமாக வெட்ட வேண்டியிருக்கும். இதுவே சற்றே பழைய மீனாய் இருந்தாலும் வெட்டும்போது வீணாய் போய்விடும்.

ஃப்ரெஷ் மீனாய் பார்த்து வாங்க செவுள் இரத்தச் சிவப்பில் இருப்பதையும், கண்கள் கறுப்பு நிறத்தில் இருக்க வேண்டும் என்பதனையும் பரிசோதித்து வாங்க வேண்டும் என்பதை ஏற்கனவே இன்னொரு பதிவில் பார்த்திருக்கிறோம். ஊடகத்தில் ஃப்ரெஷ் மீனைக் கண்டுகொள்வது மிகச் சுலபம். ஃப்ரெஷ் ஊடகம் கண்ணைப் பறிக்கும் பளபளப்போடு வெள்ளியைப் போல  மின்னும்.(பார்க்க முதல் படம்)

ஊடகம் மீனை அடையாளம் காணுவது குறித்துப் பார்ப்போம். ஊடகம் மீன் உடம்பு முழுவதும் அடர்ந்த செதில்களைக் கொண்டிருக்கும். உடலில் மேற்பகுதியில் கிழே இருக்கும் படத்தில் இருப்பது போல துடுப்பின் அமைப்பில் ஒன்று நீளமாக தனித்துத் தெரியும். சில நேரம் அவை உடைந்து போயும் இருக்கும், அதனால் குழப்பம் வரலாம்.


இதனால் இன்னொன்றையும் சரிபார்த்துக் கொள்ளலாம் மீனின் வயிற்றுப் பகுதி முடிந்து வால் ஆரம்பிக்கும் இடத்திற்கு முன்பாக சிறிய அளவில் துடுப்பு அமைப்பு இருக்கும். உடலின் மேற்பகுதி துடுப்பு அமைப்பின் மினியேச்சர் போல இது இருக்கும். ஆனால் இதில் இருக்கும் நீளமான அமைப்பு கடினமான முள்ளாக மிக அழுத்தமாக இருக்கும். 

 ஊடகம் மீன் குழம்பு வைக்கும் போது தேங்காய் சேர்த்தும் , தேங்காய் சேர்க்காமலும் என எப்படி வைத்தாலும் நல்ல சுவையுடன் இருக்கும். குறிப்பாக மிளகு,சீரகம் சேர்த்து வைக்கும் ஊடகம் மீன் குழம்பு வித்தியாசமான சுவையில் மீண்டும் மீண்டும் ஊடகத்தை வாங்கத் தூண்டும் வகையில் இருக்கும். 

Sunday, March 22, 2015

நகரை மீன் - red mullet - goat fish

செந்நகரை,நவரை ,கல் நகரை என்று பலவாறு அழைக்கப்படும் நகரை மீன்கள் சிறிய வகை மீன்களில் ஒன்று. பொதுவான பண்பாக சிவப்பு நிறத்தை கொண்டிருந்தாலும் நகரை மீன்களில் சிறு சிறு வேறுபாடுகளுடன் பல வகைகள் உண்டு. எனினும் சுவையில் ஒன்று போலவே இருக்கும். சிறிய வகை மீன் என்ற போதும் சதைப்பற்றுடன் இருக்கும். கீழே படத்தில் இருப்பவை நகரைகளில் சில வகை.



 குழம்பு,வறுவல் என இரண்டிற்குமே பிரமாதமான சுவையில் இருக்கும் இந்த நகரை மீன்கள் சகாயமான விலைக்கே கிடைக்கும். சென்னையில் ரெகுலராக கிடைக்கும் இம்மீன்களை கிலோ 80லிருந்து 100 வரை பெரிய மார்க்கெட்டுகளில் விற்கிறார்கள்.  சில இடங்களில் பத்து மீன்கள் இருக்குமாறு கூறுகட்டி நூறு ரூபாய்க்கு விற்பார்கள். அதிகபட்சமாக கிலோவிற்கு 120 வரை கொடுத்து வாங்கலாம்.

பொதுவாகவே சிறிய சைஸ் மீன்கள் சுத்தம் செய்ய நேரம் எடுப்பவை என்பதால் அளவில் சிறியதாக இருக்கும் நகரை மீன்களை மார்க்கெட்டிலேயே சுத்தம் செய்து வாங்கிக்கொள்வது நல்லது.

நகரை மீன்களை வறுக்கும் போது அதன் உடற்பகுதில் கத்தியால் மெலிதாய் கீறிவிட்டால் மசாலா   நன்றாக சேர்ந்து அட்டகாசமான சுவையில் இருக்கும். பாரை மீன்கள் போல தோல் அழுத்தமாய் இருக்கும் மீன்களுக்கு இந்த கீறல் முக்கியமாய் தேவைப்படும், மெல்லிய தோலைக்கொண்டிருக்கும் நகரைக்கு கீறல் தேவை இல்லை எனினும் வறுத்த பின் அந்த கோடுகள் பார்வைக்கு உனனே சாப்பிடத் தூண்டும் வகையில் இருக்கும்.முள்ளில் இருந்து எளிதாக சதைப்பகுதியை பிரித்தெடுக்க முடியும் இந்த நகரை மீன்களை வைத்து ஃபிங்கர் ஃபிஷ் போன்ற ரெசிப்பிகளை மிகுந்த சுவையுடன் செய்யலாம். மேலும் குறைந்த விலையில் ரிச்சான டிஷ் கொடுத்த மாதிரியும் இருக்கும். வெறும் ரசம் வைத்து நான்கு துண்டுகள் நகரை மீன் வறுவல் இருந்தால் தட்டு தட்டாய் சோறு இறங்கும்.

நகரை மீன்களை வாங்கும்போது கவனிக்க வேண்டியவை, சிறிய சைஸ் சங்கரா மீன்கள் பார்வைக்கு நகரைப் போல இருப்பதால் அவற்றையும் நகரை என்று தள்ளிவிடுவார்கள். சிறிய சைஸ் சங்கராவில் முள்ளில் இருந்து சதையை எடுத்து சாப்பிடுவது சிரமாக இருக்கும். இன்னும் சொல்லப்போனால் நகரை சைஸில் இருக்கும் சங்கரா மீன் சாப்பிட ஏதுவானது கிடையாது எனலாம்.போலவே சங்கரா வாங்கும்போது நகரையையும் சேர்த்து கொடுப்பார்கள். சங்கரா மீன்கள் நகரையைவிட விலை கூடுதலாய் விற்கப்படும் மீன்கள் என்பதால் அதிக விலைக்கு நகரையை சங்கரா என்று விற்றுவிடுவார்கள். சிவப்பு நிறத்தில் இன்னும் நிறைய மீன்கள் உண்டு அவற்றையும் நகரை என்று விற்பார்கள். அவை நகரை என்று கன்ஃபார்ம் செய்துகொள்ள முதல் படத்தில் தெளிவாய் தெரியும் ஆட்டுத்தாடி அமைப்பை சரிபார்த்தால் தெரிந்துவிடும்.


Sunday, March 15, 2015

காரப்பொடி (Ponyfish)

பொதுவாக மீன் பிரியர்கள் வஞ்சிரம்,வாவல்,ஷீலா,கொடுவா என்று ஒரு பட்டியல் வைத்திருப்பார்கள். பெரும்பாலும் இந்த பட்டியலைத் தாண்டி வேறு மீன்களை வாங்க மாட்டார்கள். இவற்றைவிட விலை குறைவாக, அதே வேளையில் வஞ்சிரம் வாவலுக்கு சுவையில் ஈடு கொடுக்கும் எத்தனையோ மீன் வகைகள் உண்டு. இவற்றைக் குறித்து தெரிவதில்லை என்பதால் எதற்கு ரிஸ்க் என்று பழகிய மீன் லிஸ்ட்டிலேயே நின்றுவிடுகிறார்கள்.

மீன்கள் வாங்கும் போது எல்லா வகை மீன்களும் குழம்பிற்கும் வறுவலுக்கும் உகந்ததாக இருக்காது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். பெரிய சைஸ் மீன்கள் வாங்கும்போது பெரும்பாலும் அந்த மீனின் தலை,வயிறு மற்றும் வால் பகுதிகளை குழம்பிற்கும் மற்றவற்றை வறுக்கவும் பயன்படுத்துவார்கள். எடுத்துக்காட்டாக வஞ்சிரமோ, வாவலோ வறுவலில் இருக்கும் சுவை குழம்பில் இருக்காது. கிலோவிற்கு  500 ரூபாய் கொடுத்து இம்மாதிரி பெரிய மீன்களை வாங்கும்போது குழம்பிற்கென்று ஒரு ஐம்பது ரூபாய்க்கு காரப்பொடி, நகரை, சுதும்பு, பன்னா போன்ற பொடி மீன்களை வாங்கிவிட வேண்டும். பெரிய மீன்களைவிட பொடி மீன்களே குழம்பிற்கு சுவை கொடுப்பவை. சாப்பிடவும் ருசியாக இருக்கும். இந்த பொடி மீன்கள் சில நேரங்களில் எல்லா மீன்களும் கலந்த மாதிரியும் கிடைக்கும். அப்படி கிடைக்கும் போது தவற விடக்கூடாது. இப்படி கலந்து கிடைக்கும்  மீன்களை பல பொடி என்பார்கள். பல பொடிகளைப் போட்டு வைக்கும் குழம்பிற்கு ஈடு இணை எதுவுமே கிடையாது எனலாம்.

பொடி மீன்களில் ஒன்றான காரப்பொடியைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

காரப்பொடியில் பெரிய சைஸ் மீனே அதிகபட்சமாக 200 கிராம் எடை உள்ளதாக இருக்கும். இந்த பெரிய சைஸ் காரப்பொடி கிலோ 150 வரை கிடைக்கும். சிறிய சைஸ் கிலோ 60லிருந்து 100 வரை சைஸிற்கு ஏற்றவாறு கிடைக்கும்.





செதில்கள் இருக்காது,குடலின் சைஸ் மிக சிறியது என்பதால் சுத்தம் செய்வது எளிது. இவற்றின் மேல் பகுதியிலும் வயிற்றுப் பகுதியிலும் தடிமனான முட்கள் இருக்கும். அவற்றை வெட்டுவது மட்டும் சிறிது சிரமாக இருக்கும். மீனின் உள்ளே நடு முள் மட்டுமே இருக்கும். அவையும் மிகுந்த கடினத்தன்மையுடனே இருக்கும். தலையும் மற்ற மீன்களைப் போல மென்று தின்ன இயலாத மாதிரி அழுத்தமாகவே இருக்கும். ஆனால் இரண்டு பக்கமும் இருக்கும் சதைப் பகுதியின் சுவையும் ,குழம்பில் விரவிக்கிடக்கும் இதன் வாசனையும் கவளம் கவளமாக சோற்றை இறக்கும்.பெரிய மீன்களின் தலை,வால் போன்றவற்றை வைத்து வைக்கும் மீன் குழம்பில் பேருக்கு இரண்டு காரப்பொடி சேர்த்தாலே அந்த குழம்பின் சுவை பிரமாதமாய் மாறிவிடும்.

இந்த காரப்பொடி மீனில் பெரிய சைஸ் கிடைத்தால் வறுக்கலாம் எனினும் குழம்பிற்குதான் இது மிக நன்றாக இருக்கும். காரப்பொடியின் கருவாடும் மிகுந்த சுவையுடையது.

காரப்பொடியை சமைக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியது மிளகு பூண்டு அதிகமாய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.தேங்காய் சேர்க்கக்கூடாது. தேங்காய் சேர்த்தே ஆக வேண்டுமென்றால் சிறிதளவு சேர்த்துக்கொள்ளலாம். சற்று கூடுதல் ஆனாலும் காரப்பொடியின் சுவை கிடைக்காது.

மீனை வாங்கும் போது செவுள் ரத்தச் சிவப்பில் இருக்க வேண்டும். இல்லையென்றாலும் குறைந்த பட்சம் சிவப்பு நிறமாவது தெரியும்படி இருக்க வேண்டும். கண்கள் கருப்பு நிறத்தில் மேலே முதலில் கொடுத்திருக்கும் படத்தில் இருப்பது போல இருக்க வேண்டும். வெள்ளை நிறத்தில் தெரிந்தால் அது மிக மோசமான கண்டிஷனில் உள்ள மீன் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.